உதயசந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதல் துறைகள்… வெளியான அவசர அறிவிப்பு!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக 4 பேர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், சண்முகம் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் ஆவர். இவர்கள் நான்கு பேருக்கும் தனித்தனியே துறைகள் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கூடுதல் ஒதுக்கீடு

இந்நிலையில் உதயசந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதலாக மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சுற்றுலா, சுற்றுச்சூழல் ஆகியவை ஆகும்.இதையடுத்து உமாநாத் ஐஏஎஸ்க்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு ஆகியவை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.முதல்வரின் சந்திப்புகள், கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், சமூக சீர்திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை சண்முகம் ஐஏஎஸ் கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

அதாவது, நான்காவது தனி செயலாளராக இருக்கும் அனு ஜார்ஜ் சொந்த காரணங்களுக்காக விடுப்பில் செல்லவிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் வசமுள்ள 12 துறைகளை பிரித்து பிற தனி செயலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இதில் முதல்வரின் முதன்மை தனிச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் பதவி வகித்து வருகிறார்.

உதயசந்திரன் ஐஏஎஸ் பின்னணி

முன்னதாக தொல்லியல் துறையில் இயக்குநராக பணியாற்றினார். ஈரோடு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த போது தொழில்நுட்ப பூங்கா வசதி, ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதேபோல் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றி இருக்கிறார்.

சமச்சீர் பாடத்திட்டம்

குறிப்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த போது சமச்சீர் பாடத்திட்ட வடிவமைப்பில் முக்கிய பங்காற்றினார். தர மதிப்பீட்டு முறையை மாற்றி அமைத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த போது இணைய வழி விண்ணப்பங்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம், கணினி சார் தேர்வுகள் போன்ற புதுமையான விஷயங்களை அறிமுகம் செய்தார்.

ஐடி துறை முதலீடுகள்

தமிழ்நாட்டு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக இருந்த போது மகளிர் சுய உதவிக் குழுக்களில் ஏழை பெண்களுக்கான கடன் உதவி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக இருந்த போது வீடு கட்டும் திட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்கள், தமிழ்நாடு மின்னணு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த போது ஐடி துறையில் நல்ல முதலீடுகளை பெற்றது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.