`தனியாளா சடைபாண்டிய களத்துல இறக்குறேன்!’ – ஜல்லிக்கட்டில் அசரவைக்கும் மாரியம்மாள்

புதுக்கோட்டை அருகே வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். சிறுவயது முதலே ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர், சடைபாண்டி என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தனி ஆளாகவே கலந்துகொண்டு தனது சடைபாண்டி காளையை அவிழ்த்துவிடுகிறார். ஜல்லிக்கட்டுக் களத்தில் ஆக்ரோஷம் காட்டும் சடைபாண்டி, ஜல்லிக்கட்டு களங்களில் பிடிபடாத காளையாகவும் வலம் வருகிறது.

சடைபாண்டி களத்தில் ஆக்ரோஷம் காட்டினாலும், மாரியம்மாளிடம் ஆட்டுக்குட்டிபோல பணிந்து நிற்கிறது. வன்னியன்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தனி ஆளாக சடைபாண்டியை அழைத்துக் கொண்டு வீரநடை போட்டு வந்த மாரியம்மாளிடம் பேசினோம்…

“சின்ன வயசிலருந்தே எனக்கும், என் அண்ணனுக்கும் ஜல்லிக்கட்டுக் காளைகள் மீது ஈர்ப்பு அதிகம். அதனாலயே அப்பா, ஜல்லிக்கட்டு காளைகள் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சார். ஆரம்பத்துல அவர் தான் ஜல்லிக்கட்டு போட்டியில காளையை அவிழ்ப்பாரு.

காளையுடன் மாரியம்மாள்

என் அண்ணன் சடைபாண்டி கொஞ்ச வருஷத்துக்கு முன்னால இறந்துபோயிட்டான். அந்த நேரத்துலதான் அப்பா இந்த காளையை வாங்கிட்டு வந்தாரு. அண்ணனோட நினைவா, அந்த காளைக்கு `சடைபாண்டி’னு பேரு வச்சோம். அதுக்கு முன்னாடி எல்லாம் தூரத்துல இருந்துதான் காளையை ரசிப்பேன். சடைபாண்டி வந்ததுக்கு அப்புறம்தான் பக்கத்துல போய் கவனிக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட 6 வருஷமா இவனை பராமரிச்சுக்கிட்டு இருக்கேன். பிள்ளைக்குக் கொடுக்கிற மாதிரி தான் தீனி கொடுத்து வளர்க்குறேன். நானும் அவனும் ஒண்ணா பொறந்தவங்க மாதிரி. நான் என்ன சொல்றேனோ, என் பேச்சை அப்படியே கேட்பான். குழந்தைகள் எல்லாம் கூட அவன் மேல ஏறி விளையாடுவங்க. அதேபோல, எல்லா ஊர் ஜல்லிக்கட்டுலயும் என்னாலதான் அவனை நிப்பாட்ட முடியும்.

மதுரையைத் தவிர தமிழ்நாட்டுல நடக்குற எல்லா ஜல்லிக்கட்டுப் போட்டிகள்லயும் இவனை இறக்கியிருக்கேன். மூக்கம்பட்டி, தச்சன்குறிச்சி, வன்னியன்விடுதி, ரெகுநாதபுரம்னு எல்லா ஜல்லிக்கட்டிப் போட்டிகள்லயும் பேன், கட்டில், பீரோ, பட்டுச்சேலை, வெள்ளிக்காசுன்னு ஏராளமான பரிசுகளை வாங்கிக் கொடுத்திருக்கான். எல்லா ஜல்லிக்கட்டிலும் பிடிபடாத காளையா வருவான்.

போட்டியில நான்தான் அவனை அவிழ்த்துவிடுவேன். அவிழ்த்துவிட்டுட்டு எல்லைக்கோட்டைத் தாண்டி போய் நிப்பேன். களத்துல குதிச்சு வர்றவங்க, கடைசியா என்னைப் பார்த்ததும் அப்படியே நின்னுடுவான். அதனாலயே எல்லா ஊருக்கும் நான் போயிடுவேன். அப்பா இருந்த வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் தான் சடைபாண்டியை ஏத்திக்கிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிக்குப் போவோம். அப்பா, ஒரு வருஷத்துக்கு முன்னால இறந்துபோயிட்டாரு.

காளையுடன் மாரியம்மாள்

இப்போ, நான் தனி ஆளாத்தான் சடைபாண்டியை களத்துல இறக்கிக்கிட்டு இருக்கேன். பரிசுகள் எல்லாம் எனக்கு முக்கியமில்ல, எல்லா ஊர்லயும் சடைபாண்டியை களத்துல இறக்கிடணும். நான் கல்யாணம் ஆகிப் போனாலும், சடைபாண்டியை கண்டிப்பா களத்துல இறக்குவேன்.

இதுவரைக்கும், எந்த ஜல்லிக்கட்டுப் போட்டியிலயும் இவன் காணாமல் போய் எங்களை தேட வெச்சதில்லை. களத்துல ஒரே போக்காக போவான். என்னை பார்த்ததும் நின்னுடுவான். எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், சடைபாண்டியை களத்துல இறக்கிடணும்ங்கிற வைராக்கியத்தை மட்டும் விடமாட்டேன்’’ என்று மாரியம்மாள் கூற, ஆமோதிப்பதுபோல தலையை ஆட்டுகிறது சடைபாண்டி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.