”விண்வெளிக்குச் சென்று வந்த உணர்வு!”- வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்ட அரசுப்பள்ளியில் மாணவர்கள் பரவசம்

தஞ்சாவூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் தென்னிந்தியாவிலேயே இரண்டாவதாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் வானியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் பூமி, நிலவு, செவ்வாய்க் கிரகம், இரவு – பகல் எப்படி வருகிறது, வானம் எப்படி நீல நிறமாக மாறுகிறது உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளைப் பள்ளியிலிருந்து கொண்டே மாணவர்கள் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

வானியல் ஆய்வகத்தைத் திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர் அருகே உள்ள மேலஉளூர் அரசு மேல்நிலைப் பள்ளி பழைமையானது. இதில் சுமார் 900 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு ரூ.3.81 லட்சம் மதிப்பில் வானியல் ஆய்வகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வானியல் ஆய்வகத்தில் அதிக திறன் கொண்ட தொலைநோக்கி, ஆக்மென்ட்டட் ரியாலிட்டி, (Augmented Reality) விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) ஹெட்செட்ஸ், வானியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் ஸ்மார்ட் டிவி, உள்ளிட்ட சுமார் 28க்கும் மேற்பட்ட உபகரணங்கள், சூரிய மண்டல அமைப்பு, விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சி, விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு, விண்வெளி சார்ந்த புத்தங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

அரசுப்பள்ளி வானியல் ஆய்வகம்

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரிடம் பேசினோம். “மேலஉளூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. அதுவும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் வானில் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கலாம். குறிப்பாக டெலஸ்கோப் மூலம் பூமி, சூரியன், நிலவு, செவ்வாய்க் கிரகம் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்கலாம். சூரிய, சந்திர கிரகணம் நிகழ்வுகளின் போது மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பார்க்கக் கூடிய வகையில் வசதி அமைக்கப்பட்டுள்ளது. வானியல் நிகழ்வுகளை இங்குள்ள ஸ்மார்ட் டிவியில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வானியல் ஆய்வகத்தைப் பார்வையிடும் அமைச்சர் அன்பில் மகேஷ்

குறிப்பாகப் பூமி, அதன் எடை அமைப்பு உள்ளிட்ட அனைத்தையும் பார்க்கலாம். பகல், இரவு எப்படி வருகின்றன என்றும், வானம் எப்படி நீல நிறமாக மாறுகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் படிப்பதற்காக வானியல் சார்ந்த புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வானியல் குறித்த விழிப்புணர்வும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.

பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வானியல் தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்களைத் தயார் செய்யவும், வானியல் ஆய்வு நிறுவனங்களில் பணிபுரியவும் வழிகாட்டும் வகையில் தயார்ப்படுத்துவார்கள். மாணவர்கள் பள்ளியில் இருந்துகொண்டே வானியல் நிகழ்வுகளைப் பார்த்து, ரசித்து பரவசம் அடையலாம். குறிப்பாக விண்வெளிக்குச் சென்று வந்த உணர்வைத் தருவதாக பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்!” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.