எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க சார்பில் நேற்று இரவு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அ.தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசுகையில், “1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றதற்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். அன்று திராவிட கழகம் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் அன்று இல்லையென்று சொன்னால், இன்றைக்கு திராவிட கழகமும், கோபாலபுரமும், கருணாநிதியும் இல்லை. இன்று உளறி கொண்டிருக்கும் ஸ்டாலினும், தமிழக அரசியலில் அடிச்சுவடு தெரியாமல் நடிகைகளின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் உதயநிதியும் இருந்திருக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் முழுக்க முழுக்க அடித்தளம் போட்டவர் எம்.ஜி.ஆர்-தான். ஆக, திராவிடம் பற்றி நீங்கள் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு செயல்படும் திராவிட மாடல் ஆட்சி என்பது… ஸ்டாலின், அவர் மனைவி துர்கா, மருமகன் சபரீசன், மகன் உதயநிதியைக் கொண்டதுதான்.
இவர்களைத் தவிர தமிழகத்தில் இன்று யாரும் அதிகாரம் படைத்தவர்கள் இல்லை. தமிழகத்தில், கொள்ளையடிக்கப்பட்டு சுரண்டப்பட்டு வரும் பணமெல்லாம் இந்த நால்வர் கைகளுக்குதான் சென்று கொண்டிருக்கிறது. ஆட்சி நடக்கிறதா என்றால், இல்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் மூன்றாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகிறது இந்த அரசு. இதற்கிடைப்பட்ட காலத்தில் மக்கள் நலனுக்காக இந்த அரசு ஏதாவது புதிய திட்டங்களை செய்திருக்கிறதா என்றால் இல்லை. இவர்களுக்கு மக்களைப் பற்றி துளியும் அக்கறையில்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் எனும் சிந்தனையில் இருக்கிறார்கள்.

அமைச்சர்கள் பணம் வசூலித்து கொடுக்கும் புரோக்கர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது அமைச்சர்களுக்கே தெரியாது. பெயரை மாற்றி இந்த அரசில் கொண்டுவரப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், ஓராண்டில் ஒரு கோடி பேருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளதாகச் சொன்னார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால், அவர்களின் ஆட்சியில் செயல்படும் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், ‘அது தவறான கணக்கு’ எனத் தெரியவந்திருக்கிறது. எனவே, ஸ்டாலின் ஒரு பொய்யர். தன்னுடைய ஆட்சியிலே என்ன நடக்கிறது எனத் தெரியாத முதலமைச்சரைத்தான் இன்று நாம் பெற்றிருக்கிறோம். முதல் கையெழுத்தில் நீட் தேர்வை நீக்குவோம் என்றார்கள், ஆனால் செய்தார்களா?
இந்த அரசு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்திலே நீட் தேர்வு தொடர்பாக 2021 ஜனவரியில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது எடப்பாடியார் அரசு. ஆனால், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதே முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரியாது. எடப்பாடியார் கண்டனம் தெரிவித்த பின்னரே, கால அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தில் இரண்டு முறை கேட்கிறார்கள். இப்போதும் இவர்கள் கால அவகாசம் கேட்பதால் உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில். அப்போது கருணாநிதி எல்லாம் போய் சேர்ந்துவிட்டார். ஆனால், 7.5% இட ஒதுக்கீடு கருணாநிதி கொண்டுவந்ததாக வெட்கமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுகிறார் பொன்முடி.

இன்று தமிழ்நாடு முழுவதும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள். சிறுவர், சிறுமியர்களுக்கு இன்று பாதுகாப்பு என்பதில்லை. காரணம் என்ன? இன்று தமிழ்நாடு எனும் பெயர் ‘போதைநாடு தமிழ்நாடு’ என்று மாறியிருக்கிறது. இது தமிழ்நாடு இல்லை… ஸ்டாலின் தலைமையிலான ‘போதை நாடு’. இப்போது எல்லா இடத்திலும் சுலபமாக போதைப்பொருள் கிடைக்கிறது. இன்று இளைஞர்கள் சமுதாயம் இந்த போதை அரசால் சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக ஒரு முதலமைச்சரே சட்டமன்றத்தில் கலவரத்துக்கான சூழலை உருவாக்கியிருக்கிறார். நாட்டிலேயே கலவரத்தை தூண்டும் முதல் குற்றவாளி இன்றைய தமிழக முதலமைச்சர். தமிழக ஆளுநரையே மிரட்டுகிறார், ஒருமையில் பேசுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் விழுப்புரம் தொகுதியில் என்ன கிழித்துவிட்டீர்கள்.
எங்களுடைய ஆட்சியில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை ஷட்டர், பொறியியல் துறையின் சில தவறுகள் காரணமாக வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டது. அன்று கூச்சலிட்டீர்கள். சரி, நீங்கள் குற்றம்சாட்டிய அந்த பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரையும் நாங்கள் சஸ்பெண்ட் பண்ணிவிட்டோம். ஆட்சி மாறியதும் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். அவரின் மீது உரிய விசாரணையை மேற்கொண்டு பணிநீக்கம் செய்திருந்தால் நீங்கள் உத்தமர். ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் அந்த தலைமை பொறியாளருக்கு கூடுதல் பதவி வழங்கி பணியில் சேர்த்துக் கொண்டீர்கள். இன்று வரை அந்த தடுப்பணை சரி செய்யப்படாமலே இருக்கிறது.

அமைச்சர்களுக்கு கோட்டையில் வேலையே இல்லை. கோட்டையைப் பூட்டி வைத்திருக்கிறார்கள். இவர்களே இவர்களின் அலுவலகத்தை ஜப்தி செய்து வைத்திருக்கிறார்கள். எல்லா வேலைகளையும் ஒரே குடும்பம் பார்த்துக்கொள்கிறது. அவர்கள் சொல்லும் இடத்தில் மாதத்துக்கு இரண்டு முறை சென்று, அமைச்சர்கள் கையெழுத்து போட வேண்டும். அதற்காக அவர்கள் ஏதாவது கமிஷன் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள். அவ்வளவுதான் அமைச்சர்களின் வேலை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.