கன்னியாகுமரியில், காதலியை சந்தித்து பேச பெண் போல பர்தா அணிந்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் கல்லூரியின் அருகே பர்தா அணிந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி வருவதை கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து அவரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்தபோது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, கேரளாவைச் சேர்ந்த அந்த இளைஞர் தனது காதலியை நேரில் பார்த்து பேசுவதற்காக பர்தா அணிந்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார், அவரது பெற்றோரை வரவழைத்து அவரை அனுப்பி வைத்தனர்.