Mrs South India 2023: கோவைக்கு கிடைச்ச பெருமை… யார் இந்த ஷாலுராஜ்?

கேரள மாநிலம் கொச்சியில் தென்னிந்திய திருமதி அழகி (Mrs South India) போட்டி 2023 சமீபத்தில் நடைபெற்றது. இது திருமணமான பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் அழகி போட்டி ஆகும். இதில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த 14 பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதற்கான இறுதி போட்டி கடந்த ஜனவரி 16ஆம் தேதி கொச்சியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்றது.

பட்டம் வென்ற மெரின் ஜான்

அவர்களில் மெரின் ஜான் என்ற பெண் அதிக மதிப்பெண்களை பெற்று பட்டத்தை தட்டி சென்றார். இவருக்கான மகுடத்தை பெகாசஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் மேலாண் இயக்குநர் ஜெபிதா அஜித், பெகாசஸ் தலைவர் டாக்டர் அஜித் ரவி, முதன்மை ஆணையர் ஸ்ரீராம் பரத் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர். இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.வைஷாலி என்ற பெண் முதல் ரன்னராக தேர்வு செய்யப்பட்டார்.

திருமதி அழகி போட்டியில் கோவையை சேர்ந்த பெண் சாதனை!

இளம் தொழிலதிபர் ஷாலுராஜ்

இரண்டாவது ரன்னராக தமிழ்நாட்டை சேர்ந்த ஷாலுராஜ் தேர்வானார். இவர் கோவையை சேர்ந்த நடன கலைஞர் மற்றும் இளம் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பெற்றவருக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும், முதலாம் ரன்னருக்கு 60 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது ரன்னருக்கு 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் சில சிறப்பு பரிசுகளும் அளிக்கப்பட்டன.

மிஸ்ஸஸ் தமிழ்நாடு

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஷாலுராஜ், கடந்த இரண்டு ஆண்டுகளாக அழகி போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். கடந்த 2022ஆம் ஆண்டு ‘மிஸ்ஸஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்றேன். இதன் தொடர்ச்சியாக தற்போது ’மிஸ்ஸஸ் சவுத் இந்தியா’ போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது ரன்னராக தேர்வு செய்யப்பட்டேன். அடுத்த கட்டமாக ‘மிஸ்ஸஸ் இந்தியா குளோபல்’ போட்டியில் பங்கேற்க இருக்கிறேன்.

உணவு பழக்க வழக்கம்

இன்றைய இளம் பெண்கள் துரித உணவுகள் மற்றும் மேலைநாட்டு உணவு பழக்க வழக்கங்களை அதிகம் கையாள்கின்றனர். ஆனால் பழங்கள் மற்றும் தானியங்களை அதிகம் உட்கொண்டு சரியான உடற்பயிற்சி, யோகா ஆகியவை செய்யும் பட்சத்தில் சிறந்த அழகு மற்றும் உடற்கட்டினை பெற முடியும் என்று கூறினார்.

பெண்கள் மேம்பாடு

மேலும் பேசுகையில், மிஸ்ஸஸ் சவுத் இந்தியா அழகி போட்டியில் பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்து மகளிர் மேம்பாடு, கிராமப்புற பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட இருக்கிறேன். சிறுமிகள் பாலியல் பலாத்காரத்தில் இருந்து விடுபடுவதற்கு போக்சோ சட்டப்பிரிவை பயன்படுத்தும் வயது வரம்பை 18ல் இருந்து 15ஆக குறைக்க வேண்டும் எனக் கூறினேன்.

சிறுமிகள் பாதுகாப்பு

இதன் அடிப்படையிலேயே அழகி போட்டியில் எனக்கான வெற்றி உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. வருங்காலங்களில் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்திக் கொள்ள இருக்கிறேன் என்று ஷாலுராஜ் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.