ஜாலியாக ஊர் சுற்ற நகை பறிப்பு.. கள்ளக்காதல் ஜோடி கைது..!

குமரி மாவட்டம் செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா (58). இவர் நடத்தி வரும் பெட்டிக்கடைக்கு கடந்த மாதம் 10-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வந்தனர். கணவன், மனைவி போல் வந்த அவர்கள் கடையில் இருந்த கிறிஸ்டினாவிடம் பழம் வேண்டும் என கேட்டுள்ளனர்.

பின்னர் திடீரென கிறிஸ்டினா கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் தப்பி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதேபோல, சமீபத்தில் தக்கலை அருகே ஒரு பெண்ணிடம் நகை பறிப்பு நடந்தது. இந்த சம்பவத்திலும் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் சேர்ந்து கைவரிசை காட்டினர். இதனால் கிறிஸ்டினாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களே, இந்த பெண்ணிடமும் நகையை பறித்திருக்கலாம் என போலீசார் கருதினர். குமரியை கலக்கும் இந்த ஜோடி யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழக – கேரள எல்லைப் பகுதியான பனச்சமூடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆண், பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள்தான் குமரியில் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும், இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும் அம்பலமானது.

மேலும் இதுபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, கேரள மாநிலம் பள்ளிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (34). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. வெள்ளறடை ஆனப்பாறை பகுதியைச் சேர்ந்த ராஜூ மனைவி சாந்தகுமாரி (40). இவர் கணவரை விட்டு பிரிந்து மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். சதீஷ் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்தார். அப்போது ஓட்டலுக்கு அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் சாந்தகுமாரி பணிபுரிந்தார்.

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கள்ளக்காதல் மயக்கத்தில் இருவரும் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஊர் சுற்றத் தொடங்கினர். இப்படி ஜாலியாக இருக்க பணம் தேவைப்பட்டது. இதனால் பணத்துக்காக குமரி மாவட்டம் வந்து பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் கிறிஸ்டினாவிடம் பறித்துச்சென்ற நகையை போலீசார் மீட்டனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரையும் போலீசார் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.