குமரலிங்கம் பகுதியில் நெற்பயிர்களில் குருத்துப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை

உடுமலை: குமரலிங்கம் பகுதியில் நெற்பயிர்களில் குருத்துப் புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காக தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதுதவிர, கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் நேரடி பாசனம் பெறுகின்றன.குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு ஆகிய வாய்க்கால் பகுதிகள் பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ளன. இப்பகுதியில் சுமார் 7500 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் போக நெல் சாகுபடி செய்தனர். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்துள்ளனர். குமரலிங்கம் பகுதியில் மட்டும் 1500 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,கதிர் பிடிக்கும் நேரத்தில் பயிர்களில் குருத்துப் புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் விளையாமல் காய்ந்துவிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பயிர் வளர்ச்சி குறைந்து தோகை சிவப்பாக மாறுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.உரிய மருந்துகளை வேளாண் துறையினர் பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.