அமெரிக்க அதிபர் வீட்டில் சோதனை; முக்கியமான ரகசிய ஆவணங்கள் மீட்பு| US Presidents house raided; Recovery of important confidential documents

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வீட்டில், எப்.பி.ஐ., அதிகாரிகள், ௧௩ மணி நேரம் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் பல முக்கியமான ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன.

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தங்களுடைய பதவிக்காலத்தில் கையாளும் முக்கியஆவணங்களை, அரசு ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த, ௨௦௦௯ – ௨௦௧௭ வரை துணை அதிபராக இருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. மேலும், கடந்த, ௫௦ ஆண்டுகளாக ஜோ பைடன் எம்.பி.,யாக இருந்து வருகிறார்.

இவர் துணை அதிபராக இருந்தபோது கையாண்ட முக்கியமான ரகசிய ஆவணங்கள் அரசு ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரிக்க, அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டது.

கடந்தாண்டு நவ.,ல் நடத்தப்பட்ட சோதனைகளில், ஜோ பைடனின் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து சில ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், டெலாவர் மாகாணம் வில்மிங்டனில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில், எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினர், நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பைடனின் மனைவி ஜில் பைடன் வீட்டில் இல்லை. அவர், சுற்றுலாவுக்காக வெளியூர் சென்றிருப்பதாக தெரியவந்தது.

தொடர்ந்து, ௧௩ மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சோதனையில், துணை அதிபராக ஜோ பைடன் இருந்த காலத்துக்குட்பட்ட பல ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதில் சில ஆவணங்கள் மிகவும் ரகசியமானவை என்று குறிப்பிடப்பட்டவை.

பாரக் ஒபாமா நிர்வாகத்தில் உக்ரைன் மற்றும் சீனாவில் உளவுத்துறை சேகரித்த தகவல்கள் மற்றும் ஈரானின் ஏவுகணைத் திட்டம் பற்றிய முக்கியத் தகவல்கள் இந்த ஆவணங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது, ௮௦ வயதாகும் ஜோ பைடன், அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபராக உள்ளார். வரும், ௨௦௨௪ல் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஒத்துழைப்பு

இந்நிலையில் தற்போது அவரது வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியிலும் அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த அதிரடிச் சோதனை குறித்து ஜோ பைடன் கூறியதாவது:

இந்த சோதனையில் எனக்கு வருத்தமோ, கவலையோ இல்லை. எப்.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் எந்த முக்கியமான விஷயமும் இல்லை என்பது, விரைவில் அனைவருக்கும் தெரிய வரும். நான் சட்டத்தை மதிக்கிறேன். எனவே, இந்த விஷயத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.