நல்ல அரசியல் தலைவர்களை ஆட்சியில் அமர வைக்க வாக்களிக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

நல்ல அரசியல் தலைவர்களை ஆட்சியில் அமர வைப்பதற்காக வாக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஜி.கே. வாசன் தெரிவித்து உள்ளார்.

தேசிய வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில்
தமிழ் மாநில காங்கிரஸ்
கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

தேசிய வாக்காளர் தினமானது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நாளாக அமைய வேண்டும். மக்களாட்சி நடைபெறும் நம் இந்திய திருநாட்டில் நாட்டை ஆள்வதற்குரிய அரசியல் அதிகாரங்கள் குடிமக்களுக்கு உண்டு.

குறிப்பாக நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி மன்றம், ஊராட்சி மன்றம் ஆகியவற்றிற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிப்பது அவர்களின் வாக்குரிமை.ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voter’s Day) கடைபிடிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகள் தகுதியுடைய அனைத்து இந்திய மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள். வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் வாக்காளர் அடையாள அட்டையை பெற வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் வாக்காளர்கள் தங்களுக்குள்ள கடமையை முறையாக, சரியாக செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்களிக்க முன்வர வேண்டும்.

எவரும் ஒருபோதும் ஓட்டுக்காக எவ்வித முறைகேட்டுக்கும் உட்படக்கூடாது. மாநிலத்திற்காக, நாட்டிற்காக வாக்களிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக வாக்களிக்க வரும் போது நல்லவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். எக்காரணத்திற்காகவும் வாக்கை வீணாக்கக்கூடாது.

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி – வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை நிலைநாட்ட, நல்லவர்களுக்கு வாக்களிக்க, மாநிலம், நாடு ஆகியவற்றை முன்னேற்ற உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்காகவும், தங்களின் குடும்பத்திற்காகவும் உற்றார் உறவினர் உள்ளிட்ட அனைவருக்காகவும், எதிர்கால சமுதாயத்தினருக்காகவும், நல்ல அரசியல் தலைவர்களை ஆட்சியில் அமர வைப்பதற்காகவும் வாக்களிக்க வேண்டும். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் அனைவருக்கும் வருங்காலம் நல்ல காலமாக அமையவும், இனிவரும் காலத்தில் நல்லாட்சி அமைந்து வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமையவும் த.மா.கா சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.