தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரி வழக்கு!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தென் தமிழகத்தில் மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விமான நிலையங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பிரிவில் (CISF, CRPF) இருக்கும் நபர்கள் பெரும்பாலானார் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், இதனால் அவர்களால் அப்பகுதியின் மொழிகளை தெரியாமல் இருந்து வருகின்றனர்.

மேலும் விமான நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் நபர்களிடம் விசாரிக்கும் சூழ்நிலை உள்ளது.

குறிப்பாக பிரபல நடிகர் சித்தார்த் அவர்களின் பெற்றோர், துரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவினர் சோதனையின்போது ஆங்கிலத்தில் தனது விளக்கத்தை தெரிவித்தும் பாதுகாப்பு பிரிவில் இருப்பவருக்கு ஹிந்தி மட்டுமே தெரிந்ததால் 30 நிமிடத்திற்கு மேல் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோன்றதொரு நிலைமை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் நேர்ந்துள்ளது.

தென் மாவட்டங்களில் மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள விமான நிலையங்களில் அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்கவும், மேலும் பாதுகாப்பு பிரிவில் ஈடுபடும் பாதுகாப்பு படையினர் பயணிகளிடம் பொறுமையாகவும், பணிவுடன் நடந்து கொள்ளவும் அடிப்படை தமிழ் தெரிந்திருக்கும் வகையில் இருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் தமிழில் வைக்கவும், மேலும் பாதுகாப்பு பிரிவில் ஈடுபடும் பாதுகாப்பு படையினருக்கு அடிப்படை தமிழ் தெரிந்திருக்கும் வகையில் இருக்க உத்தரவிட வேண்டும்.” என்று தீரன் திருமுருகன் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் வழக்கு குறித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.