திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனாமுத்தூர் அடுத்த மந்தைவெளி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் முன் விரோதத்தால் தன் சித்தப்பாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இந்த வழக்கில் ஏழுமலையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் பரிந்துரை செய்தார். இந்நிலையில் நேற்று ஏழுமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவின் படி, ஏழுமலையை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோன்று, போளூர் போலீசார் கடந்த 17-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்தவழியாக வந்த காரில் ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு கிலோ கஞ்சாவை கடத்தியது தெரிய வந்தது. இதில் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் முக்கிய குற்றவாளியான போளூர் சின்னப்பா தெருவை சேர்ந்த பாலகுமரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையின் பேரில் ஆட்சியர் முருகேஷ் உத்தரவின்படி போலீசார் நேற்று பாலகுமரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.