புதுச்சேரி: குடியரசு தினத்தன்று தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் தேசியக்கொடியை ஆளுநர் தமிழிசை ஏற்றுகிறார். நாட்டிலேயே இரு மாநிலங்களில் தேசியக் கொடியேற்றும் ஒரே ஆளுநர் இவர்தான்.
நாட்டின் 74வது குடியரசு தினவிழா புதுச்சேரி கடற்கரை சாலையில் வரும் 26ல் நடைபெறுகின்றது. இவ்விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கின்றார்.
இதனையொட்டி புதுச்சேரி கடற்கரைசாலையில் இன்று காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவுகள், முப்படைகளை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் குடியரசு தினவிழாவில் வீரதீர செயல்கள் புரிந்தவர்கள், காவலர்கள், மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வழங்கப்படும் விருதுகள் ஒத்திகையும் நடைபெற்றது.
இந்த குடியரசு தின விழாவில் இரு மாநிலங்களுக்கு ஆளுநராக உள்ள தமிழிசை இந்தாண்டும் இரண்டாவது முறையாக தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்கின்றார். காலை 7 மணிக்கு தெலங்கானாவில் நடைபெறும் விழாவில் பங்கேற்று விட்டு பின்னர் தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வரும் தமிழிசை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி வைக்கிறார். இந்தியாவில் ஒரே ஆளுநர் இரண்டு மாநிலங்களில் தேசியக்கொடி ஏற்றி வைப்பது தமிழிசை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.