ஸ்டாலின் தூக்கத்தில் கல் எறிந்த நாசர்: மறுபடியும் முதல்ல இருந்தா?

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவரை கல்லைக் கொண்டு எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளிடம் தனது நிலையை மிக வெளிப்படையாக எடுத்து வைத்தார் முதல்வர்
மு.க.ஸ்டாலின்
. “ ஒரு பக்கம் தி.மு.கவின் தலைவர். மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என்னுடைய நிலைமை.

இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல தி.மு.க. நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?

நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன். சில நேரங்களில் என்னை இது தூங்கவிடாமல்கூட ஆக்கிவிடுகிறது” என்று வருத்தத்துடன் பேசினார்.

திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சர்ச்சைப் பேச்சுக்கள், முகம் சுளிக்கவைக்கும் சில சம்பவங்கள் தான் முதல்வர் ஸ்டாலினை அவ்வாறு பேச வைத்தது. ஆனாலும் இந்த சர்ச்சைப் பேச்சுக்களும், மேற்படி சம்பவங்களும் குறைந்தபாடில்லை.

திருவள்ளூரில் நாளை (ஜனவரி 25) மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.

இதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர்., அருகில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.

அப்போது தான் அமர்வதற்காக இருக்கை எடுத்து வருமாறு திமுக நிர்வாகி ஒருவரிடம் அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் திமுக நிர்வாகியோ மிகவும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரே ஒரு நாற்காலி மட்டுமே எடுத்து வந்ததாக கூறுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர், அவரை கடுமையாக திட்டியதோடு, கீழே கிடந்த கல்லை எடுத்து அந்த நபரை நோக்கி வீசினார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் உடனடியாக பரவத் தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.