ஈரோடு கிழக்கு: பாமக வழியில் சமக – முடிவை அறிவித்த சரத் குமார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலில் இருந்த நிலையே தற்போதும் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிமுக கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்ற பாமக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்தது. மீதமுள்ள கட்சிகள் அப்படியே கூட்டணியில் தொடர்கிறார்கள் என்றாலும் அதிமுகவின் உட்கட்சி மோதல் காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே கூட்டணிக் கட்சியினரை சந்தித்து வருகின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இம்முறை மநீம கட்சி காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இன்று அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே மநீம கடந்த தேர்தலில் பெற்ற பத்தாயிரம் வாக்குகளில் எங்கள் பங்கு கணிசமாக இருக்கிறது என்று சமக தலைவர் சரத்குமார் கூறிவந்தார். எனவே இந்த தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் இடைத்தேர்தலில் போட்டி இல்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று சரத் குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நேற்று (ஜனவரி 24) காலை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடந்ததை அறிவீர்கள்.

மேலும், நேற்று மாலை உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து, முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்தக் கட்சியினருக்கும், யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முன்னோடிகளும், சகோதர, சகோதரிகளும் தொடர்ந்து மக்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.