பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த ஏழு மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உள் நோக்கி குழாய் செலுத்தி பரிசோதனை செய்த போது அயல் பொருள் (கண்ணாடி போன்ற பொருள்) மூச்சுக்குழாயில் சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் கல்யாண சுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இணைந்து குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அப்பொருளை அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.
மூச்சுத்திணறலுக்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து விரைந்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய அக்குழுவினருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மால மற்றும் சக மருத்துவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
உரிய நேரத்தில் அப்பொருளை அகற்றாமல் இருந்திருந்தால் குழந்தையின் நுரையீரல் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கக்கூடும் எனவும் இதுபோன்று குழந்தைகளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கியிருந்த கண்ணாடி போன்ற பொருள் அகற்றி உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து குழந்தையை அரசு மருத்துவர்கள் காபாற்றியுள்ள சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.