திருவானைக்காவல் தெப்போற்சவத் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்த் தலமாகத் திகழ்கிறது.

சோழர்கால பாரம்பர்யமும், பழம்பெருமையும் மிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் தெப்பம், தைத் தெப்பம் என இரண்டு தெப்ப உற்சவங்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். கோயிலுக்கு எதிரே உள்ள ராமர் தீர்த்தக்குளத்தில் ஸ்வாமி, அம்மன் சமேதராக தெப்பம் கண்டருள்வதை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்வர்.

அந்தவகையில், நிகழாண்டு தை தெப்போற்சவத் திருவிழா நேற்று (ஜனவரி 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது சந்திரசேகரர் உடனுறை ஆனந்தவல்லி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிராகாரத்தில் உள்ள கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர்.

சந்திரசேகரர் – ஆனந்தவல்லி அம்பாள்

அதனைத்தொடர்ந்து ரிஷபக் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுப் பின்னர், வேத மந்திரங்கள் முழங்க – மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு தை தெப்ப உற்சவம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து சந்திரசேகரர், ஆனந்தவல்லி அம்பாள் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழாவானது பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறவிருக்கிறது. 11 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி 4-ம் பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.