விழுப்புரம்: சொத்து தகராறில் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியரை வெட்டிய, அண்ணனை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் கோடங்குடியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வத்தின் மூத்தமகன் ஸ்டாலின் (52), விவசாயி. இளையமகன் நடராஜன் (46), விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார். நடராஜன், மனைவி, பிள்ளைகளோடு கோலியனூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற நடராஜன், மதிய உணவுக்காக வெளியே பைக்கில் வந்தபோது வாசலில் கத்தியுடன் நின்ற ஸ்டாலின் அவரது முதுகில் வெட்டியுள்ளார். இதனால் ஆசிரியர் நடராஜன் ரத்தம் சொட்ட, சொட்ட பள்ளிக்குள் உயிர்பிழைக்க ஓடினார். அப்போது அவரது அண்ணனை சக மாணவர்கள் பிடித்து கொண்டனர். அவரிடமிருந்து கத்தியை பிடுங்கும்போது கிழித்ததால் மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த வளவனூர் போலீசார் வந்து நடராஜனின் அண்ணனை கைது செய்தனர்.
விசாரணையில், இவர்களது தந்தை பன்னீர்செல்வம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இறந்ததை அடுத்து சொத்து பிரச்னை காரணமாக ஏற்பட்ட மோதலில் தம்பியை அண்ணன் வெட்டியது தெரியவந்தது.