74ஆவது குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை!

நாட்டின் 74ஆவது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றவுள்ளார். இந்த உரை அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளிலும் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும். இதேபோல், தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் முதலில் இந்தியிலும், அதனைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும்.

இதைனைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளிலும் அதன் பிராந்திய மொழிகளிலும் குடியரசுத்தலைவரின் உரை ஒளிபரப்பப்படுகிறது. அகில இந்திய வானொலியில், பிராந்திய மொழிகளில் இரவு 9.30 மணி முதல் அதன் பிராந்திய அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதன்படி, நாட்டின் 74ஆவது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றவுள்ளார். குடியரசுத் தலைவரான பின்னர் முதன்முறையாக குடியரசு தினத்தையொட்டு, நாட்டு மக்களுக்கு திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார்.

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தினம் நாளை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.

நடப்பாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அல் சிசி கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் நேற்றைய தினம் டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் எகிப்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் டெல்லி வந்துள்ளது.

இந்தியாவுக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள எகிப்து அதிபர் அல் சிசி இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அவர், இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்புகளைப் பார்வையிட உள்ளார். இந்த அணிவகுப்பில், எகிப்தின் ராணுவ வீரர்களைக் கொண்ட குழுவும் பங்கேற்க இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.