ஆணையத்துடன் இணைந்து தேர்தல் சீர்திருத்தங்கள் – சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற 13-வது வாக்காளர் தின நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் ரிஜிஜு பேசியதாவது:

மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதுதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமாக உள்ளது. தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தலில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக கடந்த 2021-ஆம் ஆண்டில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வாக்காளர் பதிவை தேர்தல் ஆணையம் எளிதாக்கியுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்படுத்தும், அதற்கான நிதி ஆதார விவரங்கள் என்ன என்பதை கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின்செயல்பாடு உலகளவில் இணையற்ற வகையில் அதிகாரம் மற்றும் சுதந்திரம் மிக்கதாக உள்ளது. தேர்தல் சீர்திருத்தங்களில் சில கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவை அனைத்தும் ஆணையம் வகுத்துள்ள விதிகளை பின்பற்றத் தவறுவதில்லை. அந்த அளவுக்கு மதிப்புமிக்க அமைப்பாக தேர்தல் ஆணையம் உள்ளது. இவ்வாறு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.