ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் பட்டியலினத்தை சேர்ந்த நகராட்சி மன்ற தலைவருக்கு தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புளியம்பட்டி நகர்மன்ற தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவரிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நகராட்சி ஆணையர் சையது உசேன் தலைமையில் குடியரசு தின நிகழ்வுகள் நடைபெறுமென நகர்மன்ற தலைவருக்கு அழைப்பிதழும் தரப்பட்டுள்ளது. இதனால் ஜனார்த்தனன் குடியரசு தின நிகழ்விற்கு செல்லவில்லை என தெரிகிறது.
குடியரசு தினத்தன்று பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அப்படி இருந்து இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் வராத காரணத்தால், தானே கொடியேற்றியதாக நகராட்சி ஆணையர் கூறினார் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கொடியேற்றுவது குறித்து தன்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று நகர்மன்றத் தலைவர் ஜனார்த்தனன் கூறியுள்ளார். இதனால் அந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in