இந்தியா முழுவதும் இன்று 74 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை தெப்பக்காடு யானை முகாமில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 28 யானையிலும் காலையில் மாயாற்றில் குளிக்க வைக்கப்பட்டு தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒரு சேர நிற்க வைக்கப்பட்டது.
ஒவ்வொரு யானைகளும் மேலும் பாகன்கள் அமர்ந்து தேசிய கொடியை பிடித்தவாறு நின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய நிலையில், குடியரசு தின விழாவில், தேசிய கொடியை முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் திவ்யா கொடியேற்றினார்.
அப்போது தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு சேர யானைகள் அனைத்தும் தும்பிக்கையை தூக்கி பிளிர்ந்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். பின்பு அங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு யானைகளுக்கும் கரும்பு, வெல்லம், தேங்காய், கேழ்வரகு , ராகி போன்ற ஊட்டச்சத்து உணவுகளும் வழங்கப்பட்டன. இன்று முதுமலைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா 74 வது குடியரசு தின விழாவை யானைகளுடன் கொண்டாடி மகிழ்ந்து சென்றனர்.