புதுச்சேரி தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா, “காங்கிரஸ் கட்சியில் இருந்த ரங்கசாமி, அதிலிருந்து வௌியேறி மதச்சார்பற்ற தலைவராக தனித்தன்மையுடன் ஆட்சி புரிந்தார். ஆனால் கடந்த தேர்தலில் மதம் சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்தார். கேட்டதற்கு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற காரணத்தை முன்வைத்தார். மாநில அந்தஸ்து கிடைத்தால் பழைய கடன்கள் தள்ளுபடி ஆகும். புதிய தொழிற்கொள்கை ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றெல்லாம் சொன்னார்.
ரங்கசாமி நம்பியதை ஆமோதிக்கும் வகையில், ஒன்றிய அமைச்சர்கள் தொடங்கி, பிரதமர் வரை கல்வி, சுற்றுலா, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் கொண்டுவந்து ஆன்மிக பூமியான புதுச்சேரியை `பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம்’ என்று வாக்குறுதி அளித்தனர். இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமர் கொடுத்த வாக்குறுதியால் புதுச்சேரி மக்கள் அந்தக் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் சொன்னதைப் போல புதிய ரயில் தடமும், விமான நிலையமும் வந்ததா… பழைய கடனைத் தள்ளுபடி செய்தார்களா… மாநில அந்தஸ்துக்கான முயற்சி ஏதேனும் எடுத்திருக்கிறார்களா என்றால் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு 10,000 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று, அதற்கான ஆணையை பிரதமர் கையால் கொடுப்போம் என்றார்கள். செய்தார்களா… இல்லை.
மாநில அந்தஸ்து விவகாரத்தில் மிகப்பெரிய நாடகத்தை இந்த அரசாங்கம் அரங்கேற்றி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் அரசுதான் புதுச்சேரியில் இருக்கிறது. பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் பலமுறை புதுச்சேரிக்கு வந்து சென்றிருக்கின்றனர். அவர்களிடத்தில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் மாநில அந்தஸ்து கோரிக்கையை ஏன் முன்வைக்கவில்லை… ’ஏற்கெனவே ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. ஆனால், நாங்கள் கொடுப்போம்’ என்று சொன்னதால்தானே புதுச்சேரி மக்கள் வாக்களித்தனர். ஆனால் முதல்வர் ரங்கசாமி அதற்கான எந்தவொரு ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்காமல், மக்களை திசை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார். மாநில அந்தஸ்து கிடைத்தால்தான்,

அதிகாரம் வரும் என்று கூறும் ஆட்சியாளர்கள், அதிகாரம் இல்லாமல் எப்படி ஆறு சாராய ஆலைகளுக்கு அனுமதி அளித்தார்கள் ? மின்துறையை தனியார்மயமாக்கினார்கள். காரைக்கால் துறைமுகத்தை தனியாரிடம் கொடுத்தார்கள். இப்படி பல்வேறு முறைகேடுகளைச் செய்வதற்கெல்லாம் மாநில அந்தஸ்து தேவைப்படவில்லை. ஆனால் அரசு ஊழியர்களுக்கு, தொழிற்கொள்கை உள்ளிட்ட புதுச்சேரி வளர்ச்சிக்கு அதிகாரிகள் தடையாக இருப்பதாகக் கூறி தொடர்ந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். புதுச்சேரி மக்களையும், தன்னுடன் இருப்பவர்களையும் ஏமாற்றுவதற்கு மாநில அந்தஸ்தை அஸ்திரமாகப் பயன்படுத்துகிறார் ரங்கசாமி.
தேதியைக் குறிப்பிட்டு அரசு சார்பு நிறுவனங்களுக்கு மூடுவிழா கண்டது ரங்கசாமி அரசுதான். மின்துறையில் மறைமுக மோசடி அரங்கேறி வருகிறது. தனியார்மயம் ஒரு பக்கம். அப்படி தனியாருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள். ஏற்கெனவே புதுச்சேரி மின்துறை மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. தற்போது பிரீபெய்டு மீட்டர் பொருத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. 3,18,000 லட்சம் மீட்டர்கள் வாங்குவதற்கு ரூ.254 கோடியை இந்த அரசே ஒதுக்குகிறது. அதுவும் கொள்ளையடிக்க வரும் தனியாருக்கு புதுச்சேரி அரசு கடன் வாங்கி அதை வாங்கித்தர போகிறது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை.

சட்டமன்றத்தில் அறிவிப்பு ஏதும் இல்லை. பத்திரிகைகளைப் பார்த்து தெரிந்துகொள்ளும் நிலைதான் உள்ளது. ரூ.1,233 கோடிக்கு காரைக்கால் துறைமுகம் இன்று அதானி, அம்பானிக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து இங்குள்ள ஆளுங்கட்சியினர், அரசியல் கட்சியினர் கோழி இரை முழுங்கியதுபோல அமைதியாக இருக்கின்றனர். அதேபோல் மின்துறையை அரசுதான் தனியார்மயமாக்குகிறது. ஆனால் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றோ, ஒருபோதும் மின் கட்டணம் உயராது என்றோ, எப்போதும் போல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்போம் என்றோ முதல்வரும், அமைச்சரும் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. ஆனால் தனியார்மயத்துக்கான வேலைகள் அரசால் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முழுவதுமாக சீரழிந்து கிடக்கும் கல்வித்துறை குறித்து இன்றைய ஜூனியர் விகடன் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து வருகிறார்கள். ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லை. இதுவரை ஒழுங்காக கொடுத்து வந்த உணவு தற்போது இல்லை. சீருடை கொடுக்கவில்லை. காமராஜர் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் நீங்கள், மாணவர்களுக்கு ஒழுங்கான உணவை தாருங்கள். அட்சயபாத்திரா திட்டத்தில் ஸ்கா என்ற மதச்சார்புள்ள அமைப்பிடம் உணவு தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடையது. வெங்காயம், பூண்டு இல்லாமல் மாணவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கிறார்கள். இந்த சாப்பாட்டை முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர்களும் சாப்பிடுவார்களா?
குழந்தைகள் சாப்பிட முடியாத தரமற்ற அரிசியை சாப்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள். என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களே இது குறித்து கடுமையான புகார் தெரிவித்தும், முதல்வரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம் ஆர்.எஸ்.எஸ் தலையீடு. புதுச்சேரியை காட்டிக் கொடுத்தவர்களால் ஏற்பட்ட இந்த ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். ரங்கசாமியுடன் கூட்டணி இல்லாமல் பா.ஜ.க தனியாக தேர்தலைச் சந்திக்க தயாரா… அப்படி சந்தித்தால் பா.ஜ.க ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாது. முதலமைச்சராக ஆட்சியில் இருந்தால்போதும் என்று பா.ஜ.க செய்யும் தவறுக்கெல்லாம் ரங்கசாமி மௌமனமாக இருப்பது புதுச்சேரிக்கு நல்லதல்ல. தமிழக முதல்வர் தளபதியாரின் திராவிட மாடல் அரசின் சாரல் புதுச்சேரியில் அடித்துக் கொண்டிருக்கிறது. அவரது பெயரைச் சொல்லி புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி அமையும்” என்றார்.