காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் பரந்தூர், ஏகனாரம், வளத்தூர், நெல்வாய், தண்டலம் உட்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட 4,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 164 நாட்களாக பரந்தூர், ஏகனாபுரம் இப்பட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் “மத்திய மாநில அரசுகள் அறிவிக்கப்பட்ட வேளாண்மை தொழிலையும், விவசாயிகளையும், குடியிருப்புகளையும், நீர் நிலைகளையும், குறிப்பாக ஏகாம்பரம் கிராமத்தை முழுமையாக அழித்து நிறைவேற்றப்பட உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்தை எந்த ஒரு வடிவத்திலும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதோடு மாநில அரசு இந்த திட்டத்தை கொள்கை அளவில் கைவிட வேண்டும் எனவும், இதற்கான அறிவிப்பை மாநில மாநில அரசு வெளியிட வேண்டும் எனவும் இந்த கிராம சபை கேட்டுக் கொள்வதோடு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என முழுமையாக எதிர்த்து இந்த கிராம சபையில் தொடர்ந்து 4வது முறையாக மனதார தீர்மானம் நிறைவேற்றுகிறது.
கிராம சுயாட்சியை மதிக்கப்பட வேண்டும் எனவும் இந்த கிராம சபை மாவட்ட மற்றும் மாநில அரசை கேட்டுக் கொள்கிறது” என ஏகாம்பரம் கிராம சபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம் ஆகிய 3 தினங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பரந்தூர் பசுமை வழி விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்திற்கு எதிராக தொடர்ந்து 13 கிராம மக்களும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் தற்போது நான்காவது முறையாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.