சென்னை: “எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமையும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்ககோட்டையன், “எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தேர்தலாக இது அமையும். திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி திருப்பு முனையை உருவாகியது போன்று ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். அந்த அளவுக்கு தான் மக்களின் மனநிலை உள்ளது. இந்தத் தேர்தல் தமிழகத்திற்கு ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும்.
நாம் தனித்து களத்தில் நின்றுள்ளோம். நமது கூட்டணி தொடர்பாக 3 நாட்களில் பொதுச் செயலாளர் அறிவிப்பார். 98.5 சதவீத நிர்வாகிகள் ஒரே அணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருங்கிணைந்ததுள்ளோம். இந்த வெற்றி சரித்திரம் படைக்கும் வெற்றியாக அமையும்” என்று அவர் கூறினார்.