சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,”கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, வரும் திங்கட்கிழமை மீண்டும் முறையிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது.