குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிபிசி ஆவணப்படம், அதானி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் அந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். அந்த வகையில் இன்று இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி தலைமையில் நேற்று நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரை சிறப்பாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
அனைத்துவித பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, பிபிசி ஆவணப்படம், அதானி நிறுவனம் மீதான மோசடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள்.
அதனால், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இம்முறை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.
இந்த அறிக்கையில் 2022 – 2023ஆம் ஆண்டின் திட்டங்கள் குறித்து இடம் பெற்றிருக்கும். நாளை நிர்மலா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
newstm.in