வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

டெல்லி: டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 2023-24 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டுக்கு தொடரும் என்று பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு மீண்டும் டெல்லி மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் டெல்லி மக்கள் 1.75 லட்சம் கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தியுள்ளனர்.

அதிலிருந்து வெறும் 325 கோடி ரூபாயை மட்டும் டெல்லி வளர்ச்சிக்காக மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பணவீக்கத்திலிருந்து மீளும் வகையில் இந்த பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை. மேலும் பணவீக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. மேலும் வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கு எந்தவித உறுதியான திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. கல்விக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் 2.64 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு 2.2 சதவீதத்திலிருந்து 1.98 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமானது. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.