ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிட்டனில் போராட்டம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

லண்டன்: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிட்டனில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக விலைவாசி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இரு பிரதமர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தற்போது ரிஷி சுனக் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் ஓய்வூதியம், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள், ரயில் ஓட்டுநர்கள், விமான பணியாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், அரசு ஊழியர்கள் என 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்தம் இடையூறுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றதால் பிரிட்டனில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 85 சதவீத பள்ளிகள் பாதிப்பை சந்தித்தன. லண்டனில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இணைந்த முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின், வரிவிதிப்பு முறை நியாயமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “சமத்துவமின்மை மிகப் பெரிய அளவில் அதிகரித்துவிட்டது. இதனை நாடு தாங்காது. பிரிட்டனில் முன்பை விட கோடீஸ்வரர்கள் அதிகரித்துவிட்டனர். கோவிட் காலத்தில் கோடீஸ்வரர்கள் நிறைய பணம் சம்பாதித்தனர். அதற்கு ஏற்ப அவர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை.” என அவர் குற்றம் சாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.