ராமநாதபுரம் மாவட்டம், அய்யாக்கண்ணுபிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவர் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கிறார். இவர் கடந்த மாதம் தொடக்கத்தில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் வீட்டு உபயோகப் பொருள்களை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார். அதன் பிறகு சில நாள்கள் கழித்து இவரின் வீட்டு முகவரிக்கு பதிவு தபால் ஒன்று வந்திருக்கிறது. அந்த தபாலில், இவர் ஆர்டர் செய்த பொருள்களைக் குறிப்பிட்டு, `எங்கள் நிறுவனத்தின் 14-ம் ஆண்டு ஆண்டு விழாவை முன்னிட்டு பரிசு கூப்பன் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த கூப்பனை சுரண்டி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை குறித்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால், உங்கள் வங்கிக் கணக்கிற்கு அந்த தொகை பரிசாக அனுப்பப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, சவுந்தரபாண்டியன் கூப்பனை சுரண்டி பார்த்தபோது, அதில் எட்டு லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக அறிந்திருக்கிறார். இதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து, உடனடியாக அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். இணைப்பை எடுத்த நபர் இந்தி, ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார்.

அவரிடம், `உங்கள் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட கூப்பனில் எனக்கு எட்டு லட்ச ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறார். அதற்கு வாழ்த்து தெரிவித்த அந்த நபர், `நீங்கள் ஆர்டர் செய்து வாங்கிய பொருள்களின் அடிப்படையில் உங்கள் பெயர் மற்றொரு பரிசு குலுக்கலில் சேர்க்கப்பட்டு, அதிலும் 1,20,000 ரூபாய் பணம் விழுந்திருக்கிறது. மொத்தம் 9,20,000 ரூபாய்யைப் பரிசாக பெறப்போகிறீர்கள்’ எனக் கூறி ஆசையை தூண்டியிருக்கிறார். மேலும், `பணத்தைப் பெற வேண்டும் என்றால் சில விதிமுறைகள் உண்டு, அதற்கு சிறிய தொகையை அனுப்ப வேண்டும்’ என அந்த நபர் கூறியிருக்கிறார்.
அதனை நம்பி 12 முறைக்கு மேல் அந்த நபர் சொல்லிய வங்கிக் கணக்குகளுக்கு பல தவணைகளாக ரூ. 2.20 லட்சம் வரை அனுப்பியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பரிசுத்தொகையை அனுப்பாமல், தன்னிடம் மட்டுமே பணத்தை வாங்கி வந்ததால் சந்தேகமடைந்த சவுந்தரபாண்டியன் அந்த நபரிடம் இனி பணம் அனுப்ப முடியாது, பரிசுத்தொகையை கொடுக்குமாறு கேட்டதையடுத்து, ஒரு சில நாள்களில் பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும் எனக் கூறியிருக்கிறார்.

ஒரு வாரம் ஆகியும் வங்கிக் கணக்கிற்கு பணம் வராததால் மீண்டும் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆஃப்பில் இருந்திருக்கிறது. இதன் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை சவுந்தரபாண்டியன் உணர்ந்திருக்கிறார். இது குறித்து ராமநாதபுரம் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.