மும்பையில் ஒரு பெண் தன்னுடைய கணவனை கொலை செய்ய ரூ.50 ஆயிரம் கொடுத்திருக்கிறார். மும்பை அருகிலுள்ள நைகாவ் கழிமுகப்பகுதியில் பாதி அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் இறந்து கிடந்த நபர் கொலைசெய்யப்பட்டது தெரிய வந்தது. தலையில் அடிக்கப்பட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டிருந்தார். உடனே காணாமல் போனவர்கள் பட்டியலை போலீஸார் சேகரித்தனர். இதில் கொலைசெய்யப்பட்டவர் கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்த உஸ்மான் அன்சாரி என்று தெரிய வந்தது.

உடனே போலீஸார் அன்சாரியின் வீட்டுக்குச் சென்றனர். அவரின் மனைவி மீனா வீட்டில் இருந்தார். ஆனால் பக்கத்து வீட்டில் வசித்த பிலாவல் மற்றும் அவரின் மனைவி சோபியா ஆகியோரை காணவில்லை என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அன்சாரியின் மனைவி மீனாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பிலாவல் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து தன்னுடைய கணவரை கொலைசெய்ய சொன்னதாக போலீஸில் தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து சீனியர் இன்ஸ்பெக்டர் கைலாஷ் பார்வே, “பிலாவலுக்கும், மீனாவுக்கும் திருமணம் மீறிய உறவி இருந்திருக்கும் என்று சந்தேகிக்கிறோம். அது பிலாவல் மனைவி சோபியாவுக்கும் தெரிந்திருக்கவேண்டும். பிலாவல் மற்றும் அவரின் மனைவி இருக்கும் இடத்தை அவர்களின் மொபைல் போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்து கைதுசெய்திருக்கிறோம். இருவரும் குஜராத் மாநிலம் வாபியில் பதுங்கியிருந்தனர்.

இந்தக் கொலைக்கு சோபியாவும் உடந்தையாக இருந்திருப்பார் என்ற கோணத்தில் அவரையும் கைதுசெய்திருக்கிறோம். பிலாவல் அன்சாரியை நைகாவுக்கு அழைத்துச்சென்று நன்றாக மது அருந்த செய்திருக்கிறார். பின்னர் அம்மிக்கல்லால் அன்சாரியின் தலையில் பிலாவல் அடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து, ஏற்கெனவே எடுத்துச்சென்ற கத்தியால் குத்திக் கொலைசெய்து கடலில் இருக்கும் மாங்குரோவ் வனப்பகுதியில் போட்டுவிட்டு வந்துவிட்டார். தற்போது மூவரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.