ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தெலங்கானா மாநிலத்தின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவையில் அவர் தனது உரையில் கூறியதாவது:
வளர்ச்சியிலும், பொதுநலனை காப்பதிலும் நாட்டிலேயே தெலங்கானா முதலிடம் வகிக்கிறது. நாட்டுக்கே உணவு விநியோகம் செய்யும் அளவுக்கு விவசாயத்தில் முன்னேறியுள்ளது. ‘விவசாயிகளின் காப்பாளன்’ திட்டம் உலகம் முழுவதும் நல்ல பெயரை பெற்றுள்ளது. புதிய தலைமைச் செயலகத்துக்கு டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. விரைவில் தெலங்கானாவில் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை அமைக்கப்பட உள்ளது.
மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்களை உருவாக்கி,ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய ஆட்சியர் அலுவலகங்கள் உட்பட அனைத்து அரசு கட்டிடங்களும் கட்டப்பட்டுவருகின்றன. நாட்டிலேயே அதிகபட்சமாக ஹைதராபாத் நகர சாலைகளில் 9.8 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிகள் 3-ல் இருந்து 17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப துறைகளில் ரூ.3.31 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. யாதாத்ரி லட்சுமி நரசிம்மர் கோயில் ஒரு வரலாற்று சாதனை.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் இரு அவைகளின் சபாநாயகர்கள், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.