ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதற்காக 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் ஈரோட்டில் முகாமிட்டு, பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன், காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி-க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “ஈரோடு கிழக்குத் தொகுதியில் மதச்சார்பற்ற சக்திகளின் வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டிருக்கிறேன். என் மகன் ஈ.வெ.ரா திருமகன் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்றுவதற்கும், ஈரோடு மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதற்காகவும்தான் போட்டியிடுகிறேன்” என்றார்.
அதைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலில் தி.மு.க வீழ்த்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “நல்ல நேரத்தில் அண்ணாமலையை ஞாபகப்படுத்தாதீங்க. அவர் மிகப்பெரிய மனிதர், அவர் சொல்வதை நான் எப்போதும் பொருட்படுத்த மாட்டேன். ஈரோடு கிழக்குத் தொகுதியில் கை சின்னத்தில் வாக்குக் கேட்டு தி.மு.க அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் பம்பரமாக சுழன்றுவருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வினர் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.