விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு, குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின் மாவட்ட செயலாளரும், சார்பு நீதிபதியுமான இருதயராணி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், மலைவாழ் மக்களுக்கான குறைகள் குறித்து சார்பு நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த ஜோதி பேசுகையில், “சூழல் மேம்பாட்டுக்குழுவில், எங்கள் வேலைக்கு தகுந்த கூலி வழங்கப்படுவதில்லை. பேசப்பட்ட கூலியிலிருந்து பாதியை மட்டும் வழங்கிவிட்டு, முழு ஊதியத்துக்கும் வனத்துறையினர் கையெழுத்து போட்டு பெற்றுக் கொள்கிறார்கள். இதற்கு நீங்கள் தான் தீர்வு ஏற்படுத்தித் தரவேண்டும்” என்றார்.

மலைவாழ் மக்களின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து வனத்துறையினரிடம் நீதிபதி விளக்கம் கேட்டார். அதற்கு, அதிகாரிகள் உரிய பதிலளிக்காமல் சமாளித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அடைந்த சார்பு நீதிபதி இருதயராணி, “நீதிபதிகள் யாரும் காதில் ‘பூ’ வைத்துக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் அனுப்பும் அறிக்கையை விசாரணை நடத்தாமல் அப்படியே முடித்து வைப்பதில்லை. நாங்கள் உரிய முறையில் விசாரணை நடத்தி வருகிறோம். நீங்கள் என்ன செய்தாலும் என்னுடைய கவனத்திற்கு வந்துவிடும்” என காட்டமாக பதிலளித்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் அமைதி நிலவியது.
பின்னர், இதுதொடர்பாக மலைவாழ் மக்களுக்கு நீதிபதி நம்பிக்கையளித்து பேசினார். அப்போது, “எங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக காவல்நிலையத்தில், இதுவரை 14 முறை நாங்கள் புகார் அளித்துள்ளோம். ஆனால் அந்த புகார்களின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாரளிக்கச்சென்றால் எங்கள் புகாரை மதிப்புக்காக கூட வாசித்து பார்ப்பதில்லை” என காவல்துறையினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மலைவாழ் மக்கள் முன்வைத்தனர்.
இதுகுறித்தும் காவல்துறையினரிடம் விளக்கம்கேட்ட அவர், “மலைவாழ் மக்கள் அளித்து நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ள 14 புகார்கள் மீதும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்” என காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், ஆதார் அட்டை, வங்கி கணக்கு தொடக்கம், புதிய குடும்ப அட்டை வழங்கக்கோருவர்கள் என அரசாங்க தேவையுள்ள மக்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்” என வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசிக்கும் 34 குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் புதிய உடைமைகளை சார்பு நீதிபதி இருதயராணி மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.