அஜித் புகைப்படத்தை தூக்கிய விக்னேஷ் சிவன்.. AK62 இயக்குநர் யாரு?

AK 62 Vignesh Shivan: பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் துணிவு படம் ரிலீஸாகி வசூலை குவித்து வருகிறது. 3 வாரங்களை கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்பு வந்த வலிமை திரைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்த நிலையில், அதையெல்லாம் அடித்துநொறுக்கும் வகையில் அஜித்தின் துணிவு படம் இருந்தது. 

தொடர்ந்து, அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. குறிப்பாக, அஜித்தின் அடுத்த திரைப்படம் அவருக்கு 62ஆவது படமாகும். அத்திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுக்கிறார் என அறிவிக்கப்பட்டது. போடா போடி, நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல் இரண்டு காதல் ஆகிய படங்களை எடுத்துள்ள விக்னேஷ் சிவன், முதல் முறையாக பெரிய நடிகரை வைத்து இயக்குவதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நெட்பிளிக்ஸில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்திலும் விக்னேஷ் சிவன் ‘லவ் பண்ணா உட்றனும்’ ஒரு பகுதியை இயக்கியிருந்தார். 

தொடர்ந்து, AK62 படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அரவிந்த் சாமி, சந்தானம் ஆகியோரும் AK62 படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. துணிவு ரிலீஸை அடுத்து நடிகர்கள் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், விக்னேஷ் சிவன் இன்னும் திரைக்கதையை முழுமையாக நிறைவு செய்யவில்லை எனவும், அதனால், AK62 படத்தை அவர் இயக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்ப்பட்டது.

AK62 படத்தை மகிழ் திருமேனி அல்லது அட்லீ ஆகியோரில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், விக்னேஷ் சிவன் AK62-வில் இருந்து விலகுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 

அதாவது, ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் உள்ள தனது சமூக வலைதளப்பக்கத்தில் ‘AK62’ என குறிப்பிட்டிருந்த விக்னேஷ் சிவன், தற்போது அதை நீக்கி ‘Wikki6’ என மாற்றியுள்ளார். மேலும், அவரின் ட்விட்டர் கவர் புகைப்படத்தில் ஆரம்பம் படத்தின் அஜித்தை வைத்திருந்த விக்னேஷ் சிவன், தற்போது, Never Give Up என்ற தலைப்பில் இருக்கும் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.  

இதனால், AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், அவரது ஆறாவது படத்திற்கு தயாராகி வருவதும், அது AK62 இல்லை என அவரின் பதிவு மூலம் தெரியவருகிறது. 

அஜித் அடுத்தடுத்த படங்களில் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பளித்தாலும்,  AK62 படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி வலுவாகியுள்ளது. தொடர்ந்து, விஜயின் 67ஆவது படமான ‘லியோ’வும், AK62 படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த குழப்பத்தால் AK62 தாமதாமாகும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.