சென்னை: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கை அனைத்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் சனிக்கிழமை (பிப்.5) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான, அதிமுக அதிகாரபூர்வ வேட்பாளரை, கட்சியின் பொதுக்குழு உருப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாக தேர்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, அனைத்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை சனிக்கிழமை (பிப்.4) அனுப்பப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து, அதனை 5.2.2023 அன்று இரவு 7 மணிக்குள், சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் என்னிடம் சேர்த்துவிடுமாறு அன்புடன் கேட்க்கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம் என்றும், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் நேற்று உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.