இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் குறித்தும் இன்னும் சில முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மேட்டூர் அணை முன்னதாகவே திறக்கப்பட்டதால் குருவை மற்றும் சம்பா பருவ நெல் விளைச்சல் நன்றாக இருந்தது.” என்று கூறினார். 

சம்பா பருவ நெல் விளைச்சல் நன்றாக இருந்த நிலையில் எதிர்பாராத விதையாக தற்போது பெய்யும் மழையால் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சம்பா பருவ நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் காவிரி டெல்டா பகுதி முழுவதும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையான காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக போராட்டங்கள் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் பற்றி குறிப்பிட்ட அவர், சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் கம்பெனிகளை பலப்படுத்துவதற்காக உள்ளதே தவிர ஏழைகளுக்கு பலன் ஏதும் இல்லை என்றும், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார் ..

கடந்த நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 89 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 60,000 கோடியாக இது குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்த முத்தரசன், ஏழைகளை பட்டினி போட்டு சாவடிக்க மத்திய அரசு திட்டம் போட்டுள்ளது என தெரிவித்தார்.

பங்கு சந்தை மோசடியில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. பல்வேறு இந்திய நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய்கடன் வழங்கியுள்ளது.
 அதானி குழும பங்கு மோசடியில் தனக்கு பங்கு இல்லை என மோடி கருதினால் நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள இரண்டு ஆவணப் படங்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதன் தடைகளை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தினை பிரித்து கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் எனவும் முத்தரசன் தெரிவித்தார். 
முன்னதாக முத்தரசன் கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய கம்யூ கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.