ஐந்து நீதிபதிகள் நியமனம்; உச்சநீதிமன்றத்திடம் பணிந்த ஒன்றிய அரசு.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதனால் தான் தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்பு விழாவைக் கூட பிரதமர் நரேந்திரமோடி புறக்கணித்தார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தலைமை நீதிபதி பதவி ஏற்பில் பிரதமர் கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், கடந்த கடந்த நவம்பரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் விமர்சித்தார்.

அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரும், நீதி அமைப்பு பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துவதாக அதிருப்தி தெரிவித்தார். இது குறித்து ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல் கூறும்போது, ‘‘அரசாங்கம் நீதித்துறையை கைப்பற்ற முயற்சிக்கிறது. சட்ட அமைச்சருக்கு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றி நன்றாகத் தெரியவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் பற்றி அவருக்குத் தெரியாது என்று நான் முன்பே கூறியுள்ளேன். அது போல அனைத்து நிறுவனங்களும் அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுதந்திரத்தின் கடைசி கோட்டை நீதித்துறை. உயர் நீதித்துறைக்கு நீதிபதிகள் நியமனம் குறித்த இறுதி வார்த்தை அரசாங்கத்திடம் விடப்பட்டால், அவர்கள் இந்த நிறுவனங்களை, அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சியின் சித்தாந்தத்துடன் இணைந்த நபர்களால் நிரப்புவார்கள்” என தெரிவித்தார். அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், ஒன்றிய அரசு நீதிமன்றத்தை கைப்பற்ற துடிப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கார் ஆகியோர் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதித்துறை மற்றும் கொலீஜியம் அமைப்புக்கு எதிராக பொது வெளியில் உச்சநீதிமன்றத்தின் மாண்பை சிதைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக பாம்பே வழக்கறிஞர்கள் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் கொலிஜியம் பரிந்துரைப்படி விரைவில் நீதிபதிகள் நியமனம் நடைபெறும் என ஒன்றிய அரசு உறுதியளித்தது.

அந்தவகையில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் நியமனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இனி உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பார்கள் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.