குடியரசுத் தலைவரை அவமதிக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தை முடக்குகிறது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி

கொல்கத்தா: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவமதிக்கும் நோக்கிலேயே நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. நாட்டின் தற்போதைய வளர்ச்சிநிலை குறித்தும் அதன் எதிர்கால இலக்கு குறித்தும் குடியரசுத் தலைவர் தனது உரையில் விரிவாக பேசி இருக்கிறார். குடியரசுத் தலைவரின் உரை தொடர்பாக விவாதிக்கவும், அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவும் வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், நாடாளுமன்றம் செயல்பட முடியாத அளவுக்கு கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கி வருகிறது.

குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அவர் மீது காங்கிரஸ் கட்சி கொண்டிருக்கும் பகைமையையே இது காட்டுகிறது. எந்த ஒரு விவகாரம் குறித்தும் விவாதிக்கத் தயார் என அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ் தடுப்பது ஏன்? குடியரசுத் தலைவர் எதிர்ப்பு மனநிலையில் எதிர்க்கட்சிகள் இருப்பதை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள்” என தெரிவித்தார்.

ஸ்மிருதி இரானியின் இந்தக் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ”நாடாளுமன்றத்தின் சட்ட திட்டங்கள் குறித்து ஸ்மிருதி இரானிக்கு தெரியவில்லை. காங்கிரஸ் மீது அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. பொதுத் துறை நிறுவனங்களான எல்ஐசியும் எஸ்பிஐயும் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளன. பொதுமக்களின் அந்தப் பணம் தற்போது மூழ்கிக்கொண்டிருக்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாக இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன” என தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் முறைகேடான செயல்பாடுகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டென்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியிட்ட ஆய்வறிக்கையை அடுத்து, அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்துள்ளது. எனினும், நிதிமுறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல என்று அதானி நிறுவனம் கூறி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.