புதுடில்லி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், அதன் 16 ஆயிரத்து 133 கோடி ரூபாய் வட்டி நிலுவைத் தொகையை பங்குகளாக மாற்றி வழங்க, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம், ‘ஸ்பெக்ட்ரம்’ நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு பதிலாக, தன் பங்கு களை வழங்க தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தது.
இதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதையடுத்து, 16 ஆயிரத்து 133 கோடி ரூபாய்க்கு ஈடாக, நிறுவனத்தின் 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளை, அதே விலையில் வழங்க இருப்பதாக வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தொலைத்தொடர்பு அமைச்சகம் பிப்ரவரி 3ம் தேதி வழங்கிய ஆணையின்படி, நிலுவைத் தொகையை, பங்குகளாக வழங்க உள்ளோம். 16 ஆயிரத்து 133 கோடி ரூபாய் நிலுவைத் தொகைக்கு, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட 1,613 கோடி பங்குகளை அதே விலையில் வழங்க உள்ளோம்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக, வோடபோன் நிறுவனம், நிலுவைத் தொகையை பங்குகளாக வழங்கும் பட்சத்தில், அரசுக்கு 35.8 சதவீத பங்குகள் கிடைக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement