குலசேகரம்: குமரி மாவட்டம் திருவட்டாரில் நடந்த ஆஞ்சநேயர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் ஒன்றிய சுற்றுலா மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் தற்போதைய பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறையில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்ந்தே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்றிரண்டு புதிய துறைமுக திட்டங்கள் நடைமுறைப்படுத்த சாத்தியம் உள்ளது. தமிழகத்தில் சுற்றுலா திட்டங்களை பொறுத்தவரை மாநில அரசு எந்த திட்டங்களையும் ஒன்றிய அரசிடம் கேட்கவில்லை. மாநில அரசு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தால் ஆய்வு செய்து நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே தமிழகத்தில் 76 திட்டங்களில் 50 திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.