ராமநாதபுரம் மாவட்டத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு `முகவை சங்கமம்’ என்ற பெயரில் மீண்டும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் வாசகர்களை விழாவில் பங்கேற்க வைப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலாகப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தொடங்கி வைத்தார். அப்போது ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளியிட்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் கடந்த எட்டு ஆண்டுகளாக ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா நடத்தப்படவில்லை.

இந்நிலையில், நடப்பாண்டில் புத்தகத் திருவிழாவை நடத்த அதற்கென அமைக்கப்பட்ட கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆட்சியரும், அதற்கு ஒப்புதல் அளித்து, அரசுத் துறைகள் உதவிபுரியும் என உறுதியளித்தார். அதன்படி ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா ‘முகவை சங்கமம்’ என்ற பெயரில் பிரமாண்டமாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.13 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து வருகிற 9-ம் தேதி முதல் 19-ம் தேதிவரை ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் புத்தகத் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தப் புத்தகத் திருவிழாவைப் பிரமாண்டமாக நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் புத்தகத் திருவிழாவுக்கான ‘செல்ஃபி பூத்’ அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரத்தில் இயக்கப்பட்டு வரும் அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்களில் ‘முகவை சங்கமம்’ புத்தகத் திருவிழா ஸ்டிக்கர்கள் ஒட்டியும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்குத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

புத்தகத் திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பெருமைகளைக் குறிக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மரபு வழி நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த புத்தகத் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய இரண்டு லட்சம் புத்தகங்கள் வரவழைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், “இன்றைய இளைய சமுதாய இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் புத்தகத் திருவிழாவின் ஒரே நோக்கம். ஒரு மாணவன் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினான் என்றால் அவனுடைய சிந்தனையும், செயல்களும் மேலோங்கி அவனை ஒரு சிறந்த மனிதனாக மாற்றி விடும் சக்தி புத்தகத்திற்கு உண்டு.

ராமநாதபுரத்தில் இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துவது என்பது மிகப் பெருமையாக உள்ளது. இதில் அனைவரையும் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதில் தீவிர முயற்சியில் இறங்கி, ஒவ்வொரு நாளும் மாறத்தான், துண்டுப் பிரசுரம், ஸ்டிக்கர் ஒட்டுதல் என மக்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறோம்.
இவ்விழாவில் கொடையாளர்களிடமிருந்து புத்தகங்கள் பெறப்பட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகத் திருவிழாவில் பயன்படுத்த உள்ளன.
அந்த வகையில் ஒவ்வொரு நாளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களால் சுமார் 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதே போல் மாவட்டத்தில் இரண்டு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கொடையாளர்களிடமிருந்து நாள்தோறும் புத்தகங்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே பலர் பயன்பெறும் வகையில் எழுத்தாளர்கள், அறிஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புத்தகங்கள் வழங்கி இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

இந்தப் புத்தகத் திருவிழாவில் புத்தக வாசிப்பாளர்கள், எழுத்தாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் என அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று தங்களுக்குப் பிடித்தமான வாசகர்களின் புத்தகங்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்று வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு புத்தகத் திருவிழாவை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.