வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

வடலூர்: வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்தில் 152வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. நாளை (5ம் தேதி) 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு 152வது ஜோதி தரிசன விழாவையொட்டி, சத்திய ஞான சபையில் அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது.

இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் வள்ளலார் இல்லத்தில் இருந்து மருதூர் கிராம மக்களால் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழியிலும், அவர் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும் சன்மார்க்கக் கொடிகள் ஏற்றப்பட்டது. இதையடுத்து சத்திய ஞான சபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் பலவகை பழங்கள், சீர்வரிசைப் பொருள்களுடன், வள்ளலார் பயன்படுத்திய பொருள்களையும் வள்ளலார் திருவுருவ படத்தையும் பல்லக்கில் வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சத்திய ஞான சபை வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வந்து ஒன்று கூடினர்.

பின்னர் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை -அருட்பெருஞ்ஜோதி’ என்ற வள்ளலாரின் பாடலை பாடியும் வள்ளலார் எழுதிய கொடி பாடல்களைப் பாடி கொண்டே காலை 10 மணியளவில் சன்மார்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது. நாளை (5ம் தேதி)  காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 6ம் தேதி மறுநாள் (6ம் தேதி) காலை 5.30 மணி என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இதையடுத்து 7ம் தேதி (செவ்வாய்க்கிழமை) 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாக தரிசனமும் நடைபெறும்.

விழாவை காணவரும் பக்தர்களுக்காக அறநிலைய துறை மற்றும் வடலூர் நகராட்சி சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் ஒன்று கூடுவார்கள் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக காவல்துறையினர் சார்பில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 900 போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு ரயில், பஸ்கள் இயக்கம்
சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது. கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், வேலூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.