சென்னை சௌகார்பேட்டையிலுள்ள சி5 காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராகப் பணிபுரிகிறார் பெண் காவலர் புஷ்பராணி. 23 வருடங்களாக இவர் தினமும் சைக்கிளில் வேலைக்குச் சென்று வருகிறார். சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சைக்கிளில் பயணம் செய்யும் புஷ்பராணியை, டிஜிபி சைலேந்திர பாபு சமீபத்தில் பாராட்டியுள்ளார்.
புஷ்பராணிக்கு வாழ்த்து சொல்லிப் பேசினோம். “நான் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை சைக்கிள்ல பயணிக்கிறேன். எழும்பூர்ல இருந்து சென்னை கலைவாணர் அரங்கு வரையிலும், சௌகார்பேட்டையில இருந்து திருவொற்றியூர் வரையிலும் சைக்கிள்ல தான் போறேன். 10 கிலோமீட்டருக்கு அதிகமான தூரமா இருந்தாதான் பஸ்ல போறேன். இதனால செலவும் மிச்சமாகுது. சைக்கிள் ஓட்டுறதால எந்த வேலையும் தாமதமாகல. நவீன உலகம்னு சொல்லிட்டு இன்னிக்குப் பலரும் சோம்பேறியாயிட்டாங்க. ஆரோக்கியம்னாலே என்னனு தெரியாமப் போச்சு.
சைக்கிள் ஓட்டுறது உடலுக்கு மட்டுமல்ல மனசுக்கும் ஆரோக்கியத்தைத் தரும். சைக்கிள் ஓட்டும் போது மன அழுத்தங்கள் காணாமல் போயிரும். எத்தனையோ பேர் என்ன விமர்சனம் பண்ணாலும் எனக்கு சைக்கிள் ஓட்டுறது தான் பிடிச்சிருக்கு. 40 வயசுக்கு மேல உள்ள பொண்ணுங்களுக்கு உடம்புல நிறைய பிரச்னைகள் வருது. 43 வயசுலயும் நான் சுறுசுறுப்பா இருக்கேன்னா என் சைக்கிள் தான் காரணம். மாதவிடாய் நாள்கள்லயும் நான் சைக்கிள் ஓட்டுறேன். அதனால எனக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.
கல்யாணம் ஆன பிறகு பல பெண்களும் தங்களுக்குனு நேரம் ஒதுக்குறதோ, நல்லா சாப்பிடறதோ கிடையாது. அவங்களுக்குனு நேரம் ஒதுக்கி மனசையும், உடம்பையும் ஆரோக்கியமா வச்சுக்கணும். கடைக்குப் போகும் போது, குழந்தையை ஸ்கூல்ல விட்டுக்கூட்டிட்டு வரும்போதெல்லாம் பெண்கள் சைக்கிள் ஓட்டினாலோ, நடந்தாலோ உடம்பு நல்லா இருக்கும்”என்றார்.