வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செஸ்டர்பீல்ட்-தந்தையின், ‘மொபைல் போனை’ பயன்படுத்தி, தொடர்ச்சியாக உணவு, ‘ஆர்டர்’ செய்த 6 வயது அமெரிக்க சிறுவனின் செயலால், வீடு முழுதும் உணவுப் பொருட்கள் குவிய, குடும்பத்தினர் திகைத்துப் போயினர்.
![]() |
அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் உள்ள செஸ்டர்பீல்ட் என்ற இடத்தில் வசிப்பவர், கெய்த் ஸ்டோன்ஹவுஸ். இவரது மனைவி கிரிஸ்டின் ஸ்டோன்ஹவுஸ், சமீபத்தில் இரவுக் காட்சி திரைப்படம் பார்க்க சென்றார்.
வீட்டில் கெய்த் மற்றும் அவரது 6 வயது மகன் மேசன் இருந்தனர். அப்போது கெய்த்தின் மொபைல் போனை மேசன் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில், ‘கிரப்ஹப்’ என்ற ஆன்லைன் வாயிலாக உணவு, ‘டெலிவரி’ செய்யும் நிறுவனத்தில் இருந்து கெய்த் பெயருக்கு உணவு வந்தது.
யார் ஆர்டர் செய்தது என யோசித்தபடி கெய்த் அதை வாங்கி வைக்க, அடுத்தடுத்து பல்வேறு உணவகங்களில் இருந்தும், ‘சான்ட்விச், பீட்ஸா, ஷவர்மா, பர்கர்’ என உணவுகள் வரிசையாக வந்தபடி இருந்தன.
பிறகு மகனிடமிருந்து போனை வாங்கிப் பார்க்க, இதை பயன்படுத்தி மேசன் உணவு ஆர்டர் செய்ததை அறிந்து கெய்த் திகைத்துப் போனார். வந்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் அடுக்கினார். பின் இதில் இடம் போதாத நிலையில், அக்கம்பக்கத்து வீட்டாரை அழைத்து அவர்களுக்கும் கொடுத்தார்.
![]() |
கெய்த் கணக்கில் இருந்து வந்த ஆர்டர்களை பார்த்து திகைத்துப் போன கிரப்ஹப் நிறுவனம், அவருக்கு 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுக் கூப்பன்களை அளித்தது. கெய்த் தம்பதியரை, தங்கள் நிறுவனத்தின் ஆன்லைன் விளம்பரத்துக்கு பயன்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.
மகனின் துடுக்குத்தனத்தால் பணத்தை இழந்தாலும், ஒரே நாளில் பிரபலம் ஆனது குறித்து கெய்த் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கிரப்ஹப் செயலியில், கெய்த் தன், ‘கிரெடிட் கார்டு’ விபரங்களை சேகரித்து வைத்து இருந்ததால், 6 வயது மகனால் எளிதாக உணவை ஆர்டர் செய்ய முடிந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement