இலவச வேட்டி சேலைக்கு டோக்கன்… நெரிசலில் சிக்கி 4 பேர் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

CM Stalin In Tirupattur Stampede: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் ஐயப்பன் புளு மெட்டல்ஸ் (ஜல்லி மற்றும் எம் சாண்ட்) தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் தை பூசத்திருவிழாவிற்காக வருடந்தோறும் இலவசமாக வேட்டி சேலை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதேபோன்று, இந்த வருடமும் இலவச வேட்டி சேலையை வழங்க நேற்று அதற்கான டோக்கன்களை வாணியம்பாடி வாரச்சந்தை அருகே உள்ள இடத்தில்  வழங்கியுள்ளனர். அப்பொழுது அங்கு, பெண்கள் மற்றும் மூதாட்டிகள் உள்பட அதிக அளவு கூட்டம் கூடியது. சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால்  கூட்ட நெரிசலில் டோக்கன் வாங்குவதற்காக முந்தி சென்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

அதில், சிலர் தவறி கீழே விழுந்துள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி 16 க்கும் மேற்பட்ட பெண்கள், பெண்கள் மூதாட்டி காயமடைந்தனர். உடனடியாக அவர்களை  மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த குரும்பட்டி பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (60), அரப்பாண்ட குப்பம் பகுதியை சேர்ந்த ராஜாத்தி (62), ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த நாகாம்மாள் (60), பழய வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த மல்லிகா (75)  ஆகிய 4  மூதாட்டிகள்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து கோட்டாச்சியர் பிரேமலதா, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், காவல்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு உடனடியாக அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இலவச வேட்டி சேலைக்கு டோக்கன் விநியோகித்த ஐயப்பனை வாணியம்பாடி நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, இலவச வேட்டி சேலை டோக்கன்கள் வாங்க கூட்ட நெரிச்சலில் சிக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 5000 ரூபாயும் நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வாங்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.