ஓபிஎஸ் வந்தால் ஈபிஎஸ் ஏற்பாரா? இடைத்தேர்தல் ட்விஸ்ட்… ஜெயக்குமார் பளீச்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில்
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
என இருவரும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்திற்காக உச்ச நீதிமன்றம் செல்ல இரண்டு தரப்பும் சமரசமாக சென்றுவிட நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதற்கு எடப்பாடி ஒத்துவரவில்லை. ஓபிஎஸ் மட்டும் இறங்கி வர தயாராக இருக்கிறார்.

பொதுக்குழு கையில் முடிவு

இந்நிலையில் பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்து விட்டு வாருங்கள். இந்த முடிவில் ஓபிஎஸ் கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு அவரது முடிவு எனக் கூறிவிட்டது. அதேசமயம் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த விஷயங்களும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அரசியல் களம் நகர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

ஓவர் நைட் மாற்றங்கள்

ஆனால் பாஜக உடனான நிலைப்பாட்டில் மட்டும் இன்னும் குழப்பத்தில் இருக்கிறார். ஏனெனில் அக்கட்சியை ஒதுக்கி வைத்து விட்டு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயர் வைத்து போஸ்டர்கள் அடித்தனர். அக்கட்சியின் தலைவர்கள் புகைப்படங்களை தவிர்த்தனர். அதன்பிறகு ஓவர் நைட்டில் எல்லாம் மாறின. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இருப்பதாக காட்டிக் கொண்டனர்.

ஓபிஎஸ் தரப்பு அதிருப்தி

இதன்மூலம் ஏதோ விஷயத்தில் டெல்லியின் அதிகார மட்டத்திற்கு எடப்பாடி தரப்பு அச்சப்படுவதாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஓபிஎஸ் அதிமுகவில் அதிகாரம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் சுருங்கி கொண்டே செல்கின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் பேட்டி

அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அவர்கள் மூலம் உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை 100 சதவீதம் பின்பற்றியுள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் பாஜகவும் இருக்கிறது. வரும் 7ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் இருக்கிறது.

கட்சி தலைமை முடிவு

எனவே அவர்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க காலம் உள்ளது. அதை பொறுத்தவரையில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. இரட்டை இலை ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்ய வந்தால் ஏற்பீர்களா? என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு, 7ஆம் தேதி இறுதி நாள். அதன்பிறகு இந்த விஷயம் குறித்து கட்சி தலைமை முடிவெடுத்து அறிவிக்கும் என்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

மேலும் பேசுகையில், அதிமுகவின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடவில்லை. அவர்கள் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். கருத்தே சொல்லக்கூடாது என யாரும் கூற முடியாது. அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. தற்போதைக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறோம். மற்றவை எல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.