புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கைக்குப்பின், கொலீஜியம் பரிந்துரைப்படி, உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை சேர்த்து அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. ஆனால், தற்போது 27 நீதிபதிகளுடன் உச்ச நீதிமன்றம் இயங்குகிறது. நீதிபதிகள் பற்றாக்குறையால் ஏராளமான வழக்குகளை விசாரிக்க முடியவில்லை, இந்நிலையில் 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் கடந்த டிசம்பர் 13-ம் தேதி பரிந்துரை செய்தது. அதன்பின் கடந்த ஜனவரி 31-ம் தேதி அலகபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.
2 மாதங்களாக சிக்கல்: ஆனால் கடந்த 2 மாதங்களாக உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை நியமிக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வந்தது. சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையின்போது, கொலீஜியம் பரிந்துரைகளின் நிலவரம் பற்றி அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ் ஓகா ஆகியோர் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல், 5 நீதிபதிகள் நியமனம் தொடர்பான உத்தரவு இன்னும் 2 நாளில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வது மிகவும் மோசமானது. இதனால் கடும் நடவடிக்கைகள் எடுக்க நேரிடும். இது நன்றாக இருக்காது’’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமனுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் நியமனத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. அதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து 5 பேரும் நீதிபதிகளாக பதவி ஏற்பர்.