துணிவு படம் பார்த்து விட்டு வங்கியில் கொள்ளையடிக்க துப்பாக்கியுடன் வந்த மாணவர்.. மனசுல மைக்கேல் ஜாக்சன்னு நெனப்பு..!

துணிவு படம் பார்த்துவிட்டு, தாராபுரம் அருகே, பொம்மைத் துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளைக் காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் கனரா வங்கியில் ஊழியர்கள் காலை 11 மணியளவில் வழக்கம் போல் பணிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பர்தா அணிந்து வந்த ஆசாமி ஒருவன் திடீரென வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியை காட்டி வங்கி அதிகாரிகளை மிரட்டி கொள்ளையடிக்க வந்திருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.வங்கியில் இருந்த பொதுமக்கள் அவனது கையில் இருந்த துப்பாக்கி மற்றும் வெடிகுண்டை பறித்து தலையில் ரெண்டு தட்டு தட்டி மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலங்கியம் போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் அலங்கியம் காந்தி நகரை சேர்ந்த சுரேஷ் என்ற பாலிடெக்னிக் மாணவர் என்பதும் சமீபத்தில் நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தை பார்த்து அதில் வருவது போல கொள்ளையடிக்க திட்டமிட்டு, அதற்காக அசால்ட்டாக கொள்ளை அடிக்க வங்கிக்குள் நுழைந்து சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து கைப்பற்றபட்டது பொம்மை துப்பாக்கி மற்றும் போலிவெடிகுண்டுகள் என்பதும் தெரியவந்தது. வங்கி மேலாளர் சுகந்தி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் , பிடிபட்ட சுரேஷுக்கு பொன்னாடையால் முக்காடு போட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்றனர்

பட்டபகலில் துணிவாக வங்கியில் கொள்ளையடிக்க முயன்று பல்பு வாங்கிய சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் இது 2வது சம்பவம் என்பதால் வங்கிகள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது என்று எச்சரிக்கின்றனர் போலீசார்.

அதே நேரத்தில் திரைப்படத்தில் சொல்லும் நல்ல விஷயங்களை விட, கெட்டவை ரசிகர்களிடம் விரைவாக சென்றடைகின்றது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.