சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று விடுத்த அறிக்கை:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கையின் மேற்கு கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் பிப்.7-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதைத் தொடர்ந்து பிப்.8-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை இன்று (பிப்.5) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 87.8 முதல் 89.6 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 73.4 முதல் 75.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் 10 செமீ மழை பதிவானது.